Friday, September 18, 2009

மு(எ)ன்னுரை




போதை கொள்ளச்செய்து, தீய விளைவுகளை உண்டாக்கும் தீண்டப்படாத ஒரு பொருள் மது – என்று இன்றைய வலிமைமிக்க ஊடகங்கள் ஒரு பதிவை நம் மனதில் ஏற்படுத்தி உள்ளன. ஆனால், மனதில் கிளர்ச்சியை உண்டாக்கி ஆடல் பாடல்களை அதிகம் அனுபவிக்கச்செய்யும் சோம பானமாக தேவ லோக இந்திரர்கள் பயன்படுத்தியதாக நாம் ப்ழைய புத்தகங்களில் படிக்கிறோம்..உடல் நலம் காக்கும் அருமருந்தாக அதே மது பயன்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றியும் நாம் காண்கிறோம்..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

மது அருந்துவதில் ஓர் நளினம் வேண்டும். அவசரப்பட்டாலோ , அதிகம் குடித்தாலோ விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக , இடைவெளி விட்டுவிட்டு குடித்தால் முழு சுவையையும் அனுபவிக்க முடியும், முழு பலனையும் அடைய முடியும். இதோ என்னுடைய மதுக்கிண்ணத்தில் ( :Blog ) அவ்வப்போது

அளவளவாக நிதானமாக சிறிது சிறிதாக மதுவை(கருத்துக்களை ) ஊற்றப்போகிறேன்.

நீங்களும் அவசரப்படாமல் , பாங்காக, பக்குவமாக, பதமாக சுவையோடு அருந்தி, உங்கள் அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி

Thursday, September 17, 2009

என் ஆசான் மாசானபு புகோகாவின் சிந்தனைத் துளிகள்




1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்
2. மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.
3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.
4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்
5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.
6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை
7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்
8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?
9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.

Tuesday, September 15, 2009

கொலைகளும் சம்பவிக்கும்...



செல்லுமிடமெல்லம் செல்போன் டவர்கள்
திரும்பிய பக்கமெல்லாம் திருமண மண்டபங்கள்
ரோட்டோர தோட்டமெல்லாம் பெட்ரோல் பங்குகள்
பட்டணத்தை ஒட்டிய பூமியெல்லாம் பகட்டான பிளாட்டுகள்
செந்நெல் விளைந்த வயலெல்லாம் செங்கல் விளையும் சூளைகள்
காற்றடிக்கும் இடங்களிலே காற்றாடி கோபுரங்கள்
கரும்பு விளந்த தோட்டமெல்லாம் இரும்பு பட்டறைகள்
பருத்தி விளைந்த பூமிகளெல்லாம் பல்கலைக் கழகங்கள்
சிறுதானிய நிலங்களெல்லாம் சிறு தொழில் நிறுவனங்கள்
புகையிலை பூமியெல்லாம் புகைகக்கும் ஆலைகள்
கனிகொடுத்த பகுதியெல்லாம் பிணி நீக்கும் மருத்துவ மனைகள்
குப்பைமேடுகளெல்லாம் குப்பைகொட்டும் அரசு அலுவலகங்கள்
மாமரங்களை அழித்தேதான் கோபுரங்கள் எழுகின்றன
பஸ்டாண்டு விரிவாக்கம் முதல்
பன்னாட்டு வானவூர்தி நிலயம்வரை
காவுகொள்வது கதிர்கள் ஆடிய கழனிகளையே
வெவ்வேறு கணக்குகளின் கவர்ச்சிகளினால்
விளைநிலம் குறையுது வேகமாக
வேறு தொழில்களின் ஈர்ப்பினிலே
வேளாண்மையை மறந்துவிட்டனர் விவரமான சிறுசுகள்
கட்டுமானத் தொழில்களிலேயே
கட்டுண்டு போனார்கள் விவசாயக் கூலிகள்
விளைவிக்க நிலமில்லை
அங்கே விளைவிப்பார் யாருமில்லை
வேலைசெய்ய ஆளுமில்லை
அங்கே மழையோடு மின்சாரத்தை காணவுமில்லை
ஜீ பூம்பா மந்திரத்தில்
தொழிற்சாலைகளை உருவாக்கலாம்
பண்டிதர்களையும் உருவாக்கலாம்
தானியத்தை உருவாக்கமுடியாது
தப்புத் தாளங்கள் போடும்வரை

சோற்றுக்குப் பஞ்சம் வந்தால்
சோதனைகள் பெருகிவிடும்
கொள்ளை அதிகரிக்கும் கூடவே
கொலைகளும் சம்பவிக்கும்
காலம் கடக்குமுன்னே
கண்டுகொள்ளாவிட்டால்
கண்டதெல்லாம் கண்முன்னே நடந்தேதீரும்.